டி20 உலகக்கோப்பை: இந்திய அணியிக்கு யாருக்கு இடம்?

Updated: Fri, Sep 02 2022 14:56 IST
Ranking India's 3 most important players in T20I cricket ahead of the T20 World Cup (Image Source: Google)

அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் தயாரிப்பாக ஆசியக் கோப்பை தொடர் அமைந்துள்ளது. இந்த ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் இந்திய வீரர்களுக்கு, டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பதால், இத்தொடர் மிகமுக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இத்தொடரில் சொதப்பும் பட்சத்தில் வீரர்களுக்கு மறுவாய்ப்பே கிடையாது. காரணம், செப்டம்பர் 11ஆம் தேதி ஆசியக் கோப்பை முடிந்த உடனே செப்டம்பர் 15ஆம் தேதி டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் பட்டியலை ஐசிசியிடம் கொடுத்துவிட வேண்டும். இதனால், ஆசியக் கோப்பையில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஆசியக் கோப்பையில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மிகச்சிறப்பாகத்தான் செயல்பட்டுள்ளது. ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலி பாகிஸ்தான், ஹாங்ஹாங்கிற்கு எதிராக சிறந்த முறையில்தான் ரன்களை குவித்திருக்கிறார். குறைந்த பந்துகளில் ரன்களை குவிக்கவில்லை என்ற குறை மட்டுமே இருக்கிறது. இந்த குறையை கோலி விரைவில் சரிசெய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎல் ராகுலும் ஒருமுறை பெரிய ஸ்கோர் அடித்துவிட்டால், அடுத்து வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிகாட்ட ஆரம்பித்துவிடுவார். இதனால், இந்த இருவர் மீதும் பிசிசிஐக்கு அவ்வளவாக அதிருப்தி இருக்காது எனக் கருதப்படுகிறது. மற்றபடி பேட்டிங்கில் எவ்வித குறையும் இல்லை. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய அதிரடி மன்னர்கள் ரன்களை குவிக்க தயார் நிலையில் இருக்கிறார்கள்.

பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா, யுஜ்வேந்திர சஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் இடங்கள் மட்டுமே தற்போதுவரை உறுதியாகியுள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள தீபக் சஹாரும் சிறப்பாக செயல்படுவார் என்பதால் இவருக்கும் அணியில் இடம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. பும்ராவுக்கு காயம் சரியாகாததால் இன்னும் அவரது இடம் உறுதியாகவில்லை. ஒரு ஸ்பின்னருக்கு கடைசி இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பைக்கான உத்தேச இந்திய அணி: ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹார்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை