ENG vs SA, 1st ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Updated: Wed, Jul 20 2022 12:01 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த நிலையில் டூர்ஹாமில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென்ஸ்டோக்ஸ் இந்த போட்டியின் இருந்து ஒரு நாள் தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.இதனால் அவருக்கு பிரியா விடை அளிக்கும் வகையில் அதிக அளவில் ரசிகர்கள் கூடினர்.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் குயின் டிக்காக் 19 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜென்மான் மாலன் மற்றும் வெண்டர் டுசன் ஆகியோர் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில்  மாலன் 52 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் நடு வரிசையில் களமிறங்கிய ஐடன் மார்க்கரம் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும். சிறப்பாக விளையாடிய வெண்டர் டுசன் 117 பந்துகளில் 134 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 24 ரன்கள் அடிக்க தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 333 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் ஐந்து ஓவர் வீசி 44 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்டுகளை ஏதும் எடுக்கவில்லை.

அதன்பின் 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 102 ரன்கள் சேர்த்தது. இதில் ஜேசன் ராய் 43 ரன்களும், பேர்ஸ்டோவ் 63 ரன்களும் எடுத்தனர். இந்தியாவுக்கு எதிராக சரிவர விளையாடாத ஜோ ரூட் இம்முறை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் தனது கடைசி ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஜாஸ் பட்லர் 12 ரன்களிலும், லியாம் லிவிங் ஸ்டோன் 10 ரன்களிலும் அலி 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இங்கிலாந்து அணி தடுமாறியது. தனி ஆளாக நின்று 86 ரன்கள் எடுத்தார் ஜோ ரூட். 

ஆனால் 46.5 வது ஓவரில் இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோக்கியா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை