IND vs NZ: சாதனை மேல் சாதனை; காம்பேக்கில் கலக்கும் அஸ்வின்!

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் விராட் கோலியின் முடிவால் தொடர்ந்து பேஞ்சில் அமர வைக்கப்பட்டு இருந்தார் அஸ்வின்.
இந்த நிலையில், அஸ்வினுக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் தம்மை வெளியே உட்கார வைத்தது எவ்வளவு பெரிய தவறு என நிரூபித்த அஸ்வின், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார்.
இதன் பிறகு, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் அஸ்வினின் உத்வேகம் பல மடங்கு உயர்ந்தது. இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் விக்கெட் வேட்டையை நடத்தினார்.
இதன் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வாசிம் அக்ரம், ஹர்பஜன் சிங் ஆகியோரை அஸ்வின் பின்னுக்கு தள்ளினார். கும்ப்ளே, கபில்தேவ்க்கு பிறகு 3ஆவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வினுக்கும், ஷாகின் அஃபிரிடிக்கும் இடையே இந்த வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர் யார் என்ற போட்டி நிலவியது.
ஆனால் மும்பை டெஸ்ட்டில் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நடப்பாண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்றும், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் அஸ்வின் படைத்தார்.
இதன் மூலம் 4 முறை ஒரே ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே, ஹர்பஜன் தலா 3 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஒரே ஆண்டில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:
- 4 - ஆர் அஸ்வின் (2015, 2016, 2017, 2021*)
- 3 - அனில் கும்ப்ளே (1999, 2004, 2006)
- 3 - ஹர்பஜன் சிங் (2001, 2002, 2008)
- 2 - கபில் தேவ் (1979, 1983)