டெஸ்ட் வரலாற்றில் சாதனைப் படைத்த ஜடேஜா!

Updated: Sat, Mar 05 2022 16:04 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா (29) மற்றும் மயன்க் அகர்வால் (33) ஆகிய இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் ஹனுமா விஹாரி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். ஹனுமா விஹாரி 58 ரன்களும், கோலி 45 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களும் அடித்தனர். 

228 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 5 விக்கெட் விழுந்தபின்னர், இந்திய அணிக்கு மூன்று 100+ பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா. ரிஷப் பந்த்- ஜடேஜா இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தனர். ரிஷப் பண்ட் 96 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

அதன்பின்னர் ஜடேஜா - அஸ்வின் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 130 ரன்களை சேர்த்தனர். அஸ்வின் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஜெயந்த் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார். 

அதன்பின்னர் ஜடேஜா - ஷமி இணைந்து 9ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி களத்தில் இருந்த நிலையில், 574 ரன்களுக்கு இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் செய்யப்பட்டது.

ஜடேஜா 175 ரன்களுடன் களத்தில் இருந்தார். 7ஆம் வரிசையில் பேட்டிங் இறங்கிய ஜடேஜா, மூன்று 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் பங்கெடுத்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 அல்லது அதற்கு  பிந்தைய பேட்டிங் ஆர்டரில்  இறங்கி மூன்று 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் பங்கெடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

இதற்கு முன் 7ஆம் வரிசையில் இறங்கிய எந்த கிரிக்கெட் வீரரும் மூன்று 100+ பார்ட்னர்ஷிப்பில் இடம்பெற்றதில்லை.  ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மூன்று 100+ பார்ட்னர்ஷிப்பில் ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக், வினோத் காம்ப்ளி, கருண் நாயர் ஆகிய இந்திய வீரர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த பட்டியலிலும் ஜடேஜா இடம்பிடித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை