சி.எஸ்.கே தோல்வியை தடுக்க இதை செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கம்போல் தோனி இதில் கேப்டனாக செயல்படுவார் என நினைத்த ரசிகர்களுக்கு அவரது கேப்டன் பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்தது.
இதனை தொடர்ந்து ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் தோல்வியடைந்தது.
கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் 131 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை குவித்தும் தோற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பதுதான். முதல் போட்டியில் 38 பந்துகளில் 50 ரன்களை விளாசிய அவர், லக்னோவுக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 16 ரன்களை அடித்து அசத்தினார்.
ஆனால் 2021 ஐ.பி.எல். தொடரில் 16 போட்டிகளில் 635 ரன்களை குவித்து அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்த சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெக்வாட், இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஏமாற்றம் அளித்து உள்ளார். முதல் போட்டியில் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்த அவர், 2 வது போட்டியில் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "சென்னை அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பது ரவிந்திர ஜடேஜாவுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும். ருதுராஜ் கெய்க்வாட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த நேரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அணியின் தொடக்க வீரர்களில் ஒருவராவது நன்றாக ஆட வேண்டியது மிகவும் முக்கியமானது. இரண்டு தொடக்க வீரர்களும் சொதப்புவது கவலைக்குரிய விசயம். தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
இரண்டில் ஒரு தொடக்க வீரர் கூட சரியாக ஆடாவிட்டால் சென்னை அணிக்கு இந்த தொடர் சிக்கலாக மாறிவிடும். ருதுராஜ் கெய்க்வாட் நிறைய ஷாட்களை ஆடக்கூடியவர். சரியான நேரத்தில் பந்துகளை அடிக்கக்கூடியவர். தொடக்கத்தில் அவர் சற்று கவனத்துடன் இருந்து விக்கெட் விழாமல் ஆடினால் ரன் தானாக வரும். இங்குள்ள ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானவை. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இம்முறை அதிக பவுன்சர்கள் வருகின்றன. பந்துகள் பேட்டில் நன்றாக படுகின்றன." என்றார்.