ஜடேஜா அடுத்த சீசனில் விளையாடுவாரா? - ஜடேஜா குறித்து அவரது நண்பர்!

Updated: Tue, May 17 2022 11:43 IST
Image Source: Google

சென்னை அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த ஆண்டு 15-வது ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் அடுத்த சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் முதல் 8 போட்டிகளில் பங்கேற்ற சென்னை அணியானது இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் மன அழுத்தத்தில் இருந்த ஜடேஜா தனது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த இருப்பதாக கூறி கேப்டன் பதவியை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார்.

அதன்பிறகு தோனியின் தலைமையில் தற்போது விளையாடி வரும் சென்னை அணி இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இன்னும் ஒரு போட்டி சம்பிரதாய ஆட்டமாக இருக்கும் வேளையில் ஜடேஜா இந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டார். அதிலும் குறிப்பாக கேப்டன்சி பதவியை அவர் தோனியிடம் ஒப்படைத்த அடுத்த போட்டியிலேயே அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒரு போட்டியில் வெளியில் அமர வைக்கப்பட்டு பின்னர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்தே ஜடேஜா வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை அணியின் நிர்வாகத்திற்கும், ஜடேஜாவுக்கும் இடையே மனகசப்பு இருந்ததாகவும், ரெய்னாவை போலவே ஜடேஜாவையும் சென்னை அணி ஓரங்கட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் ஜடேஜாவும் சென்னை அணி நிர்வாகத்தின் மீது ஒரு மனக்கசப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜடேஜாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “உண்மையிலேயே ஜடேஜா தற்போது மன வருத்தத்துடனும், மனவேதனையுடன் தான் உள்ளார். கேப்டன்சி விவகாரத்தில் சென்னை அணியின் நிர்வாகம் சற்று சரியாக கையாண்டு இருக்கலாம். ஆனால் அனைத்துமே வேகமாக நடைபெற்று முடிந்துவிட்டது.

இது போன்ற விஷயங்கள் ஜடேஜாவுக்கு மட்டுமல்ல யாருக்காக இருந்தாலும் மன வலியை தந்திருக்கும். ஜடேஜா சென்னை அணியில் நீடிப்பாரா? மாட்டாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் உண்மையில் தற்போது ஜடேஜாவுக்கு காயம் தான் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறினார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை