ஆர்சிபி அணியுடனான பிணைப்பு குறித்து ஏபிடி!

Updated: Wed, Feb 02 2022 11:47 IST
RCB legend AB de Villers gives cheeky response to people offering him apartments to live in India (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தார். 360 டிகிரி பேட்ஸ்மேன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவருக்கு பெங்களூருவில் ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், ஆர்சிபி அணிக்கும் தனக்கும் இடையிலான உறவு குறித்து ஏபி டிவில்லியர்ஸ் சில சுவாரசியமான கருத்துக்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அப்போது, ஆர்சிபி ரசிகர்கள் சிலர் உங்களுக்கு பெங்களூருவில் அபார்ட்மெண்ட் கொடுக்க முன்வந்துள்ளனர். உங்களை இங்கே வந்து விடும்படி அழைப்பு விடுத்துள்ளனர். பெங்களூரு நகரத்துடனான உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த ஏபி டிவிலியர்ஸ், ‘எனக்கு இப்போது 3 குழந்தைகள் உள்ளனர். அதனால் அந்த அபார்ட்மெண்டில் எனக்கு நிறைய அறைகள் இருக்க வேண்டும்’ என குறும்பாக பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஆர்சிபி அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது சாதாரண ஒன்று கிடையாது. எனக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது. நான் மற்ற உரிமையாளர்களின் அணிகளில் விளையாடியபோது இதுபோன்று உணர்வு பூர்வமாக எந்த ஒரு நிகழ்வையும் உணர்ந்ததில்லை.

ஆனால் பெங்களூரு அணிக்காக விளையாடும் போது மட்டும் என் மனது அவர்களுடன் ஒன்றிருந்தது. அதோடு ஆர்சிபி ரசிகர்களும் அந்த அணியும் எனக்கு முக்கியமான ஒரு பந்தம்’ என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை