ஐபிஎல் 2021: பவுண்டரி, விக்கெட்டுகளுக்கு நன்கொடை; ஆர்சிபியின் தாராள மனது!

Updated: Mon, Sep 20 2021 19:04 IST
Image Source: Google

கரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி, அமீரகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்திய நிலையில், இன்று கொல்கத்தா அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி செயல்பட்டாலும், அவரால் இந்தியாவுக்காக ஒரு ஐசிசி கோப்பையை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கிய கட்டங்களில் கோலியின் கேப்டன்சி சொதப்பிவிடுகிறது. இதன் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

ஐசிசி கோப்பைகளை போன்றே ஐபிஎல் கோப்பையையும் விராட் கோலி தலைமை தாங்கும் ஆர்சிபி அணி ஒரு முறை கூட வென்றதில்லை. எனவே கோப்பையை வென்று கொடுக்க முடியாததால் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி இந்த சீசனோடு விலகவுள்ளார். 

இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள கோலி, "ஆர்சிபி அணிக்காக நான் நீண்ட வருடமாக விளையாடி வருகிறேன். இந்த வருடம் தான் நான் கேப்டனாக இருக்க போகும் கடைசி தொடராகும். ஆனால் ஐபிஎல் எனது கடைசி ஆட்டம் வரை ஆர்சிபி அணிக்காகவே விளையாடுவேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள், எனது பயணம் தொடரும்" என கோலி கூறியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி எப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால், கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் பெங்களூருவும் தவிர்க்க முடியாத அணியாக இருக்கிறது. 

இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சிபி அணி புதிய ஜெர்சியில் களமிறங்குகிறது. 2011ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரேயொரு போட்டியில் மட்டும் அந்த அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவதை நாம் பார்த்திருப்போம். பூமியை வெப்பமயமாக்கலில் இருந்து காப்பது குறித்தும், ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பச்சை நிற ஜெர்சி அணிவார்கள். 

ஆனால் இம்முறை கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக, நீல நிற ஜெர்சி அணிந்து ஆர்சிபி களமிறங்கவுள்ளது. வீரர்கள் அணிந்து விளையாடிய நீல நிற ஜெர்ஸி ரசிகர்களிடம் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழைகளுக்கு தடுப்பூசி செலுத்த உதவியாக வழங்கப்பட உள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர், பவுண்டரி மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிராக எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஸ்பான்ஸர்கள் அளிக்கும் நன்கொடை முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை