SL vs IRE, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஸ்டிர்லிங், காம்பெர்!

Updated: Tue, Apr 25 2023 19:55 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்தது. இதில் பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர் ஆகியோர் அரைசதம் கடந்திருந்தர். 

இதில் பீட்டர் மூர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேம்ஸ் மெக்கலமும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஆண்ட்ரூ பால்பிர்னி - பால் ஸ்டிர்லிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

இதையடுத்து, லோர்கன் டக்கர் 78 ரன்களுடனும், கர்டிஸ் காம்பெர் 27 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.  இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோர்கன் டக்கம் 80 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் வெளியேறிய பால் ஸ்டிர்லிங் மீண்டும் களமிறங்கி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த இரண்டாவது அயர்லாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றார். 

அதன்பின், 103 ரன்களில் ஸ்டிர்லிங் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய கர்டிஸ் காம்பெரும் தனது முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்ததுடன், 111 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் போதிய ரன்களைச் சேர்க்க தவறினர். 

இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 492 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு நிஷன் மதுசங்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து விக்கெட்டை இழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தனர். இதனால் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 81 ரன்களைச் சேர்த்தனர். 

இதில் நிஷன் மதுசங்கா 41 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 39  ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 411 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை