ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் தீபக் சஹார்!
ஐபிஎல் ஏலத்தில் தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே அணி. கடைசியாக விளையாடிய மூன்று ஒருநாள் ஆட்டங்களில் இரு அரை சதங்களை அடித்து தன் பேட்டிங் திறமையையும் அவர் வெளிப்படுத்தினார்.
கடந்த 2018 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் தீபக் சஹார். 58 ஆட்டங்களில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவற்றில் 42 விக்கெட்டுகளை பவர்பிளே ஓவர்களில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் தீபக் சஹாரின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமிக்குச் சென்றார். இந்நிலையில் தீபக் சஹாரின் காயம் குணமாக பல வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.
இதையடுத்து மார்ச் 26 முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஆட்டங்களில் தீபக் சஹாரால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டி தொடங்கும் முன்பே பலத்த பின்னடைவை சிஎஸ்கே அணி எதிர்கொண்டுள்ளது. எனினும் ஐபிஎல் போட்டியின் இறுதிக்கட்டத்தில் சிஎஸ்கே அணியினருடன் தீபக் சஹார் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கிரிக்கெட் அகாதெமியிடமிருந்து தீபக் சஹாரின் உடல்நிலை குறித்த விவரங்களைப் பெற்றுக் கொண்ட பிறகு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சிஎஸ்கே அணி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.