சிக்ஸர் மழை பொழிந்த ரிச்சா கோஷ்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது தென் ஆப்பிரிக்காவில் வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றி இந்திய மகளிர் அணி - வங்கதேச மகளிர் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைக் குவித்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஸ்திகா பாண்டியா, ஷஃபாலி வர்மா, ஹர்லின் டியோல், ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளமவென உயர்த்தினர். இதில் ரோட்ரிக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையிலிருந்த ரிச்சா கோஷ் அரைசதம் கடந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் சிக்சர்களாக பறக்கவிட்ட ரிச்சா கோஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 3 பவுண்டரி, 9 சிக்சர்களை விளாசி 91 ரன்களைக் குவித்து அசத்தினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எட்டுக்க முடிந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 40 ரன்களையும், முர்ஷிதா காதுன் 31 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் தேவிகா வைத்தியா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.