தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவகிறேன் - ரிங்கு சிங்!

Updated: Fri, Jan 12 2024 12:29 IST
தோனி கொடுத்த அறிவுரையை மட்டுமே பின்பற்றி வருவகிறேன் - ரிங்கு சிங்! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் சேர்த்தார். அதேபோல் இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய ஷிவம் துபே 40 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களை விளாசினார். அதேபோல் ஜித்தேஷ் சர்மா 31 ரன்களும், ரிங்கு சிங் 16 ரன்களும் சேர்த்தனர்.

பவுலிங்கில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும், பேட்டிங்கில் 60 ரன்களையும் விளாசிய ஷிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே ரிங்கு சிங் தனது ஃபினிஷிங் குறித்து பேசுகையில், “பேட்டிங் வரிசையில் 6ஆவது இடத்தில் களமிறங்கி ஃபினிஷிங் செய்வது எனக்கு பழக்கமாக மாறிவிட்டது.

இந்திய அணிக்காக இந்த ரோலில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த குளிர்ந்த சூழலிலும் ரசித்து விளையாடினோம் என்று நினைக்கிறேன். ஆனால் ஃபீல்டிங் செய்வது எளிதாக இல்லை. 6ஆவது வரிசையில் பேட்டிங் செய்யும் போது எனக்குள் அதிகமாக பேசி கொள்வேன். ஏனென்றால் விளையாடுவதற்கு அதிக பந்துகள் கிடைக்காது. அதேபோல் அதிக ரன்களையும் சேர்க்க முடியாது. அதனை மீண்டும் மீண்டும் எனக்குள் சொல்லி கொள்வேன்.

ஃபினிஷிங் குறித்து குருநாதர் தோனியிடம் பேசியுள்ளேன். அவர் சொல்லியது ஒன்று தான். பந்தை பார்த்து அதற்கேற்றபடி விளையாடு என்பது தான். சமநிலை தவறாமல் மீண்டும் மீண்டும் அதனை தான் செய்கிறேன். பேட்டிங்கின் போது நான் அதிக சிந்திக்க மாட்டேன். பந்துக்கு ஏற்றபடி செயல்படுவதை மட்டுமே பேட்டிங்கில் செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை