அவரது பேட்டிங்கால் தான் எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எண்ணம் வந்தது - ரிஷப் பந்த்

Updated: Sat, Jun 18 2022 10:48 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக முதலில் முடிவடைந்த மூன்று போட்டிகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த வேளையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை 2 க்கு 2 என்ற நிலையில் சமன் செய்துள்ளது. 

அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியானது வழக்கம் போலவே முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது. அதன்படி வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஆர்டரில் ஹார்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரது அபார ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 46 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 55 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் 87 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்கள். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த், “நாங்கள் இந்த போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக வெளிப்படுத்த விரும்பினோம். அதோடு நல்ல கிரிக்கெட் விளையாட நினைத்தோம் அதற்கு கிடைத்த பரிசு தான் இந்த வெற்றி. எந்த அணி போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிக்கு தான் வெற்றி கிடைக்கும்.

அந்த வகையில் நாங்கள் இன்றைய போட்டியில் டாஸை இழந்திருந்தாலும் அதன் பின்னர் நல்ல கிரிக்கெட் விளையாடி உள்ளதால் வெற்றி பெற்றுள்ளோம். இந்த போட்டியில் பாண்டியா விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது. அதேபோன்று தினேஷ் கார்த்திக் மைதானத்திற்குள் பேட்டிங்கிற்கு சென்ற முதல் பந்திலிருந்தே அடிக்க தொடங்கி விட்டார். அவரது பேட்டிங்கால் தான் எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எண்ணம் வந்தது. அவரது பேட்டிங்கிற்கு பிறகு இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசலாம் என்ற எண்ணமும் எங்களுக்கு வந்தது.

மேலும் தனிப்பட்ட வகையில் நான் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் என்னுடைய பலத்திற்கு ஏற்ப சில முன்னேற்றங்களை நான் மேற்கொள்ள இருக்கிறேன். பெங்களூரு மைதானத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நிச்சயம் எங்களுடைய 100 சதவீத உழைப்பை நாங்கள் அந்த போட்டியில் வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை