ரிஷப் பந்தின் இடத்தை பிடிப்பாரா சஞ்சு சாம்சன்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட் சொதப்பி வருகிறார்.
ஐபிஎல் தொடரிலேயே ரிஷப் பந்த் எடுத்த 20, 30 ரன்களை பெரிய ஸ்கோராக மாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அந்த 20, 30 ரன்களை கூட ரிஷப் பண்ட் எடுக்கவில்லை. கேப்டன் பொறுப்பை ஏற்றதால் ரிஷப் பந்த்க்கு அழுத்தம் ஏற்பட்டு, அது பேட்டிங்கில் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 29 ரன்கள் எடுத்த பந்த், 2ஆவது டி20 போட்டியில் 5 ரன்களும், 3ஆவது டி20 போட்டியில் 6 ரன்களும் எடுத்துள்ளார். இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பந்த், அவருடைய சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட்டையே 125 என்ற அளவில் தான் வைத்துள்ளார்.
46 சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள ரிஷப் பந்த் 3 முறை தான் அரைசதம் அடித்துள்ளார். இதனால் ரிஷப் பந்த் இடத்திற்கு ஆபத்து வர வாய்ப்புள்ளது. தற்போது நடுவரிசையில் இவர் மட்டும் இடது கை ஆட்டக்காரர், அதுவும் ஜடேஜா அணிக்கு திரும்பினால், ரிஷப் பந்துக்கு சாதகமான அந்த ஒரு விஷயமும் போய்விடும்.
இதனால், தென் ஆப்பிரிக்கா தொடருக்கான எஞ்சிய 2 போட்டியில் ரிஷப் பந்த் தனது திறமையை நிரூபித்தே ஆக வேண்டும். இல்லையேனில் ரிஷப் பந்த் இடத்திற்கு சஞ்ச சாம்சனால் ஆபத்து வர வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆட கூடியவர். ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் இவருடைய ஆட்டம் கச்சிதமாக இருக்கும்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட ராஜஸ்தான் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்ற சஞ்சு சாம்சன், 17 போட்டியில் 458 ரன்களை குவித்துள்ளார். ரிஷப் பந்த் சொதப்பி வரும் நிலையில், பயிற்சியில் அதிரடியாக விளையாடும் புகைப்படங்களை சஞ்சு சாம்சன் தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ரிஷப் பந்த் கிடைக்கும் வாய்ப்பில் 50 சதவீதம் கூட சாம்சனுக்கு கிடைப்பதில்லை என்று ரசிகர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் வருகிற அயர்லாந்து அணியுடனான தொடரில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை சஞ்சு சாம்சன் கச்சிதமாக பயன்படுத்தினால் அவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.