ஃபேஸ் ஷீல்ட் அணிந்து ரிஷி தவண் பந்துவீசியது ஏன்?

Updated: Tue, Apr 26 2022 13:28 IST
Image Source: Google

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரிஷி தவணுக்கு இது முதல் ஐபிஎல் போட்டியாகும். இந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய ரிஷி தவண் ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்குப்பின் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு இதேபஞ்சாப் அணியில் ரிஷி தவண் தேர்வு செய்யப்பட்டாலும் அப்போது ஆடவில்லை. இப்போதுதான் முதல்முறையாக ரிஷி தவண் வாய்ப்புப் பெற்றார். 

இந்த ஆட்டத்தில் ரிஷி தவண் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இக்கட்டான நேரத்தில் தோனியின் விக்கெட்டையும், தொடக்கத்தில் துபே விக்கெட்டையும் தவண் எடுத்துக் கொடுத்தார். 

இந்த ஆட்டத்தில் ரிஷி தவண் பந்துவீசும்போது அவர் அணிந்திருந்த ஃபேஸ் ஷீல்ட் சமூக வலைத்தளங்களில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் வைரலானது. நெட்டிஸன்கள் அனைவரும் ரிஷி தவணின் ஷீல்ட் குறித்து பேசத் தொடங்கிவிட்டனர். கிரிக்கெட்டில் பீல்டர், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் ஆகியோர் ஹெல்மெட், ஷீல்ட் அணிந்து பார்த்திருக்கிறோம். முதல்முறையாக பந்துவீச்சாளர் ஃபேஸ் ஷீல்ட் அணிந்து பந்துவீசியது வியப்பாக இருந்தது.

ரிஷி தவண் ஃபேஸ் ஷீல்ட் அணிந்து பந்துவீசியதற்கு காரணம் அவர் ஏற்கெனவே முகத்தில் காயமடைந்திருந்த அனுபவம் இருந்ததால்தான் முன்னெச்சரிக்கையாக இதை அணிந்துள்ளார். அதாவது ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் பந்துவீசும்போது பேட்ஸ்மேன் அடித்த ஷாட் பந்து நேராக ரிஷி தவண் முகத்தை தாக்கியது. இதில் காயமடைந்த ரிஷி தவண், அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தபின்புதான் மீண்டும் பந்துவீச வந்தார். இதனால்தான் ரிஷி தவண் தன்னுடைய முந்தைய அனுபவத்தை எண்ணி ஃபேஸ் ஷீல்ட் அணிந்துள்ளார்.

சில நாட்களுக்கு ரிஷி தவண் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காணொளியை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த வீடியோவில் ரிஷி தவண் கூறுகையில் “ 4 ஆண்டகளுக்குப்பின் மீண்டும் ஐபிஎல் டி20 தொடருக்கு வந்துள்ளேன். ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் நான் காயமடைந்தது எனக்கு வேதனையாக இருந்தது. அதன்பின் அறுவை சிகிச்சைக்கு சென்றதால், 4 போட்டிகளில் விளையாட முடியவில்லை.

ஆனால், இப்போது உடல்தகுதியுடன் இருந்ததால், தேர்வாக முடிந்தது. தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறேன், வலிமையாகத்திரும்பி வருவேன். நான் காயமடைந்த காலம் எனக்கு உண்மையில் துயரமானது. அதன்பின் கடினமாக உழைத்து, மீண்டும் திரும்பிவந்திருக்கிறேன். 4 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ஐபிஎல்வாய்ப்புக் கிடைத்தது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியிருக்கிறேன். ஐபிஎல் தொடருக்காக கடந்த 4 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். கிரிக்கெட்டில் இதெல்லாம் நடக்கும் சிலநேரம் மகிழ்ச்சி, சிலநேரம் சோகம்.” எனத் தெரிவித்தார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை