ஐசிசி இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை - அஃப்ரிடிக்கு ரோஜர் பின்னி பதிலடி!
எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2 ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கிய நிலையில், மழை குறுக்கிட்டால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால், டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்க தேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 16 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நியாயமற்ற முறையிலும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி குற்றம்சாட்டி இருந்தார்.
இது பேசிய அவர், “மைதானம் எவ்வளவு ஈரமாக இருந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால், ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக முடிவெடுத்துள்ளது. அவர்கள் இந்தியா எப்படியாவது அரையிறுதிக்கு செல்லவதை உறுதி செய்ய வேண்டும். நடுவர்களும் அப்படித்தான். இந்தியா – பாகிஸ்தானுக்கு நடுவராக இருந்த நடுவர்கள் சிறந்த நடுவர் விருதுகளைப் பெறுவார்கள்.
மழை பெய்ததால் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இது பல விஷயங்கள் சம்பந்தப்பட்டது. ஐசிசி, இந்தியா விளையாடுவது, அதனுடன் வரும் அழுத்தம், பல காரணிகள் இதில் ஈடுபட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் லிட்டனின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அவர் பாசிட்டீவான கிரிக்கெட்டை விளையாடினார். ஆறு ஓவர்களுக்குப் பிறகு, பங்களாதேஷ் இன்னும் 2-3 ஓவர்களுக்கு விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றால், அவர்கள் போட்டியில் வென்றிருப்பார்கள் என்று நாங்கள் உணர்ந்தோம். ஒட்டுமொத்தமாக, வங்கதேசம் காட்டிய ஆட்டம் அற்புதமாக இருந்தது.” என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாக தான் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“ நீங்கள் கூறுவதில் நியாயமில்லை. நாங்கள் ஐசிசியால் சாதகமாக இருக்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை தான் அளிக்கப்படுகிறது. எந்த வழியிலும் நீங்கள் அப்படிச் சொல்ல முடியாது. மற்ற அணிகளிலிருந்து நாங்கள் என்ன வித்தியாசமாகப் பெறுகிறோம்? கிரிக்கெட்டில் இந்தியா ஒரு பெரிய அதிகார மையமாக உள்ளது. ஆனால் நாங்கள்’ அனைவரும் ஒரே மாதிரியாகத் தான் நடத்தப்படுகிறோம்,” என்று ரோஜர் பின்னி கூறினார்.
பாகிஸ்தான் அல்லது பிற நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்வது குறித்து வாரியம் சொந்தமாக முடிவெடுப்பதில்லை என்றும் அரசின் முடிவைத் தான் நம்பியுள்ளது என்றும் ரோஜர் பின்னி கடந்த மாதம் கூறியிருந்தார். இந்நிலையில், 2023 ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்து பேசிய ரோஜர் பின்னி, “அது பிசிசிஐயின் கையில் இல்லை. அது அரசு தரப்பில் இருந்து செய்யப்பட வேண்டும். அவர்கள் தான் அனுமதி வழங்குகிறார்கள். எங்கள் அணி எங்கு செல்ல வேண்டும் என்று சொல்ல முடியாது. நாம் நாட்டை விட்டு வெளியேறினாலோ அல்லது வேறு நாடுகள் இங்கு வந்தாலோ அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அந்த முடிவை நாங்கள் சொந்தமாக எடுக்க முடியாது. நாங்கள் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.