சதமடித்து சாதனைகளை குவித்த சஞ்சு சாம்சன்; குவியும் வாழ்த்துகள்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டு தொடர்களையும் ழுவதுமாக கைப்பற்றியதுடன் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
அந்தவகையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணியானது சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலமும், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 75 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களையும், ரியான் பராக் 34 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிடோய் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதேசமயம் லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3, மயங்க் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சனும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் வென்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார். அந்தவகையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக சதமடித்து அசத்திய முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணியில் எம் எஸ் தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், இஷான் கிஷன், துருவ் ஜூரெல், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட விக்கெட் கீப்பர்கள் விளையாடியுள்ள நிலையிலும் அவர்களில் யாரும் சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இப்போட்டியில் 40 பந்துகளில் சதம் விளாசி அசத்திய சஞ்சு சாம்சன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் சதமடித்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் சஞ்சு சாம்சன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளர். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.
இதுதவிர சர்வதேச அளவில் அதிவேகமாக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இந்த பட்டியளில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 35 பந்துகளில் சதமடித்து முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதமடித்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதுமட்டுமில்லால் இப்போட்டியில் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த சஞ்சு சாம்சன், வங்கதேச அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் எனும் சாதனையையும் தன்வசப்படுத்தினார். இப்போட்டியில் 8 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசிய முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் எனும் சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.