மாமனாரின் சாதனையை சமன் செய்த மருமகன்! அஸி தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி அசத்தல்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி அங்கு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய பாகிஸ்தான் அணியானது, டி20 தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் முழுமையாக தொடரை இழந்து சரணடைந்தது.
அந்தவகையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஹோபார்ட்டில் நடந்தது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களைச மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 41 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 118 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் இங்கிலிஸ் 27 ரன்களையும், ஆதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 27 பந்துகளில் 61 ரன்களைக் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்பென்சர் ஜான்சன் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த அந்த அணியின் முன்னாள் கேப்டனும் தனது மாமனாருமான ஷாகித் அஃப்ரிடியின் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி சமன்செய்து அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அந்தவகையில் ஷாகித் அஃப்ரிடி 98 டி20 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி 73 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை கைப்பற்றி அவரது சாதனையை சமன்செய்துள்ளார். அதேசமயம் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக ஹாரிஸ் ராவுஃப் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 107 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளனர்.