நாங்கள் ஒரு தன்னலமற்ற அணியாக இருக்க விரும்புகிறோம் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டு தொடர்களையும் ழுவதுமாக கைப்பற்றியதுடன் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
அந்தவகையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணியானது சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலமும், கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 75 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 47 ரன்களையும், ரியான் பராக் 34 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிடோய் 42 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதேசமயம் லிட்டன் தாஸ் 25 பந்துகளில் 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற பேட்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது.இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3, மயங்க் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சஞ்சு சாம்சனும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்டியாவும் வென்றனர்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ், “ஒரு குழுவாக நாங்கள் நிறைய சாதித்துள்ளோம். எனது அணியில் தன்னலமற்ற கிரிக்கெட் வீரர்கள் இருக்க விரும்புகிறேன். நாங்கள் ஒரு தன்னலமற்ற அணியாக இருக்க விரும்புகிறோம். ஹர்திக் கூறியது போல், களத்திலும், களத்திற்கு வெளியேயும், ஒருவரையொருவர் விளையாடுவதை ரசிக்க விரும்புகிறோம், முடிந்தவரை அதிக நேரத்தை செலவிட விரும்புகிறோம்.
Also Read: Funding To Save Test Cricket
நீங்கள் 99 அல்லது 49 ரன்களில் இருந்தாலும், நீங்கள் அணிக்காக அதிரடியாக விளையாடி பந்தை அடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கான ஒத்துழைப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சனும் அதேயே தான் செய்தார். அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதேசமயம் நாங்கள் மேம்பர் வேண்டிய இடங்களை கண்டறிவது அடுத்த தொடரில் எங்களுக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.