வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!  

Updated: Sun, Oct 22 2023 23:17 IST
வெற்றிக்குபின் விராட் கோலி, முகமது ஷமியை பாராட்டிய ரோஹித் சர்மா!   (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டியானது இன்று தர்மசாலா நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து தற்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக டேரல் மிட்சல் 130 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 95 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 46 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த தொடரை நாங்கள் சிறப்பாக ஆரம்பித்துள்ளதாக நினைக்கிறேன். தற்போது பாதி வேலை முடிந்து இருக்கிறது. இருந்தாலும் இப்படியே தொடர விரும்புகிறோம். முகமது ஷமி இந்த போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை இரண்டு கைகளால் பற்றிக் கொண்டார்.

அவருடைய அனுபவம் இது போன்ற சூழ்நிலைகளில் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை காட்டுகிறது. ஒரு கட்டத்தில் 300 ரன்கள் வரை நியூசிலாந்து வீரர்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி கட்டத்தில் மிகச் சிறப்பாக எங்களது பந்துவீச்சாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த போட்டியில் எனது பேட்டி சிறப்பாக இருந்தது. இந்த வெற்றியை நாங்கள் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. விராட் கோலியை பற்றி நிறைய பேச எதுவுமே இல்லை. ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் இதைத்தான் செய்து வருகிறார். 

இந்த போட்டியிலும் தனது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக இறுதிவரை அணியை கொண்டு வந்தார். இடையில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும் ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் அற்புதமான பாட்னர்ஷிப்பை அமைத்து எங்களை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தியாவில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு சென்று தொடர்ச்சியாக விளையாடி வருவதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை