ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!

Updated: Mon, Jan 29 2024 13:39 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இத்தொடரின் ஆரம்பத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்ம குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில், ஒல்லி போப் தனி ஒருவராக அணியை வலிமையான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார். ஆனால் இந்திய அணி வீரர்களால் ஒல்லி போப்பை தடுக்க முடியாமல் தடுமாறினர். அதிலும் அவர் கொடுத்த கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளனர். இதற்கு கேப்டனாக ரோஹித் சர்மா சரிவர செயல்படாததே காரணம் என குற்றஞ்சாட்டுகளும் எழுந்து வருகின்றது.

இந்நிலையில், இப்போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மீண்டும் மீண்டும் பால்பால் யுக்திக்கு எதிராக கேப்டன்கள் போராடுவதை ஒவ்வொரு தொடரிலும் நாம் பார்த்து வருகிறோம். அதில் தற்போது புதியதாக இந்திய அணியும் இணைந்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் அணிகள் தாங்கள் விளையாடும் விதத்திற்கு எதிர்வினையாற்ற ஒருசில முயற்சிகளை எடுத்து வருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதனை முழுமையாக செய்ய தவறுவதே தோல்விக்கு வழிவாகுக்கிறது.

 

இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஒல்லி போப் சிறப்பாக விளையாடிவந்த நிலையில், ரோஹித் சர்மா அதிரடியான மற்றும் சிறப்பான முடிவுகளையும் எடுக்கவில்லை. போப்பின் விக்கெட்டினை கைப்பற்ற ரோஹித் சர்மாவிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை. குறிப்பாக ஒல்லி போப் ஸ்கோர் செய்த ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப்பினை தடுக்கவும் அதற்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தவும் அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 

நான் பார்த்த மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளரனான ஷேன் வார்னே, தனக்கு எதிராக வீரர்கள் ஸ்வீப் ஷாட்களை அடிக்கும் போது அதற்காக ஒரு யுக்தியைக் கையாண்டு முடிந்தால் இப்போது ஸ்வீப் அடியுங்கள் பார்க்கலாம் என்று கூறுவார். ஆனால் அதுபோன்ற எந்த முயற்சியையும் இந்திய அணியிடம் நான் இந்த போட்டியில் பார்க்கவில்லை. அதனால் இங்கிலாந்து அணி வீரர்களும் எளிதாக ரன்களை குவித்தனர். இப்போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடிய விதத்தைப் பார்க்கும் போது அவர்கள் ஒவ்வொரு முறையும் பவுண்டரிகளை விளாசி ரன்களைச் சேர்த்தனர். 

இதனை தடுக்க எதிரணி தரப்பில் நடவடிக்கை எடுப்பதற்காக பவுண்டரி லைனில் ஃபீல்டர்களை நிற்கவைத்தால், ஆடுகளத்திற்குள் பந்தை தட்டிவிட்டு ஒன்று மற்றும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்திருப்பார்கள். ஆனால் அதற்கான முயற்சியை இந்திய அணி இப்போட்டியில் எடுக்கவில்லை. இதனால் தான் ரோஹித் சர்மாவின்  கேப்டன்சி எனக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை