ஆசிய கோப்பை 2022: செய்தியாளர் கேள்விக்கு நகைச்சுவையாக பதில் கொடுத்த ரோஹித் சர்மா!
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் அமீரகத்தில் தொடங்கியது. மிகவும் முக்கியமான போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதல் இன்று மாலை துபாயில் நடைபெறவுள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. எனவே இந்த முறை பதிலடி கொடுப்பதற்காக இந்திய ப்ளேயிங் 11 எப்படி இருக்கும், இந்தியா எப்படி தயாராகியுள்ளது என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா நேற்று பேசினார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளருக்கு அவர் கொடுத்த பதில் தான் இணையத்தை கலக்கி வருகிறது.
பாகிஸ்தான் செய்தியாளர், "கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் மோதிய போது இந்திய அணியின் நிலைமை என்ன ஆனது என்பது உங்களுக்கு தெரியுமே, அந்த தோல்வியின் தாக்கம் இன்னும் அணிக்குள் இருக்கிறதா, மீண்டு வருவீர்களா” என்பது போன்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு சிரித்தபடி பதிலளித்த ரோகித் சர்மா, " இங்கு பாருங்கள்.. எனக்கு நியாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த விஷயங்களை என்னால் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது. எனவே தற்போது ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் எனகூறினார்" இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதோடு அந்த பத்திரிகையாளர் நிறுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து கேள்வி எழுப்பிய இந்திய ப்ளேயிங் 11 குறித்து சூசகமாக கேட்டார். அதில், "கடந்த சில தொடர்களில் இந்தியா புதிய ஓப்பனிங்கை முயற்சித்து வருகிறது. ஏனென்றால் கேஎல் ராகுல் அப்போது இல்லை. ஆனால் இந்த முறை கேஎல் ராகுல் வந்துவிட்டதால், நேரடியாக அவர் சேர்க்கப்படுவாரா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, "டாஸ் போட்ட பிறகு உங்களுக்கே அது தெரியவரும். அந்த ரகசியத்தையாவது பாதுகாக்க விடுங்கள். வித்தியாசமாக முயற்சிப்பது தான் எங்களின் நோக்கம். நாங்கள் இன்னும் அணியை முடிவு செய்யவே இல்லை. புதிய காம்பினேஷன்களை முயற்சி செய்தால் தான் அதன் பலன்களை தெரிந்துக்கொள்ள முடியும். காத்திருங்கள்” என கூறினார்.