சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராஸ் டெய்லர்!
தற்போது 37 வயதாகும் ராஸ் டெய்லர் 2006 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 112 டெஸ்டுகள், 236 ஒருநாள், 102 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்டில் 19 சதங்கள், 35 அரை சதங்களுடன் 7683 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ஒருநாள் சதம், அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரரும் டெய்லர் தான்.
கடந்த ஜனவரி மாதம், வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டெய்லர். நவம்பர் 2020-க்குப் பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டெய்லர் விளையாடவில்லை.
இந்நிலையில் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை இன்று விளையாடி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றுள்ளார்.
நெதர்லாந்து அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 1 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஹேமில்டனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 3-0 என வென்றது நியூசிலாந்து.
ஆட்டம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் ஒலித்தபோது கண்ணீர் விட்டார் ராஸ் டெய்லர். தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் 1 சிக்ஸ் உள்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் விளையாட வந்தபோது நெதர்லாந்து அணி வீரர்களுக்கு வரிசையாக நின்று, கைத்தட்டி உரிய மரியாதையை வழங்கினார்கள்.
மேலும் டெய்லர் ஆட்டமிழந்தபோது அதை அவர்கள் கொண்டாடவும் இல்லை. நெதர்லாந்தின் கடைசி விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த டெய்லர், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார்.