கடைசி டெஸ்டில் களமிறங்கிய டெய்லர்; உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்!

Updated: Mon, Jan 10 2022 13:01 IST
Image Source: Google

வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே நியூசிலாந்து அணியின் சீனியர் வீரரான ராஸ் டெய்லர் அறிவித்திருந்தார். 

தற்போது 37 வயதான ராஸ் டைலர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,655 ரன்கள் குவித்துள்ளார்.

அது மட்டுமின்றி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் பங்கேற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் ராஸ் டைலர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற இருக்கிறார்.

இந்நிலையில் தனது கிரிக்கெட் கரியரில் கடைசி முறையாக நியூசிலாந்து அணிக்காக பேட்டிங் செய்ய களம் இறங்கிய அவருக்கு மனதை நெகிழவைக்கும் அளவிற்கான வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 363 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போது ராஸ் டெய்லர் களமிறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதுமட்டுமின்றி வங்கதேச அணி வீரர்களும் அவர் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்தது முதல் கிரீஸுக்கு வரும்வரை இருபுறமும் நின்று அரண் அமைத்தவாறு அவருக்கு கைதட்டி மரியாதையுடன் வரவேற்பினை வழங்கினர். இது குறித்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தனது கடைசி போட்டியில் விளையாடிய ராஸ் டெய்லர் 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை