WI vs ENG: பாவல் அபார சதம்; இங்கிலாந்தை துவம்சம் செய்த விண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பார்போடாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 10 ரன்னிலும், ஷாய் ஹோப் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - ரோவ்மன் பாவல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
அதன்பின் 70 ரன்கலில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோவ்மன் பாவல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோவ்மன் பாவல் 107 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பில் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 19 ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ், கேப்டன் மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பாண்டன் - பிலிப் சால்ட் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். அதன்பின் 73 ரன்களில் பாண்டன் ஆட்டமிழக்க, 57 ரன்னில் சால்டும் விக்கெட்டை இழந்ததால் இங்கிலாந்து அணியின் தோல்வியும் உறுதியானது.
இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோமாரியா செஃபெர்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.