ஐபிஎல் திருவிழா 2022: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Apr 09 2022 15:28 IST
Image Source: Google

15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் -  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - எம்சிஏ மைதானம், புனே
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி அதன் முதல் 3 ஆட்டங்களில் தோல்வியுற்று துவண்டுள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் முறையே 23 ரன் மற்றும் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால், புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நிலையில் (9வது இடத்தில்) உள்ளனர்.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியில் பேட்டிங்கில் இஷான் கிஷன் (3 ஆட்டத்தில் 81, 54, 14 ரன்), திலக் வர்மா (22, 61, 38 ரன்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ள சூர்யகுமார் யாதவ் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். கேப்டன் ரோகித் (3 ஆட்டத்தில் 41, 10, 3 ரன்) அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தமால் இருப்பது அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணியில் புதிய வரவாக இணைந்துள்ள ‘பேபி ஏபி’ என்று அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ், அவ்வப்போது கேமியோ ரோல் செய்யும் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்ட் மிடில்-ஆடரில் வலு சேர்க்கின்றனர். அணியிலுள்ள இந்திய பந்துவீச்சாளர்களில் முருகன் அஷ்வினை தவிர, பசில் தம்பி, முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தாமல் அதிக ரன்களை கொடுத்து வருகின்றனர். 

இதேபோல், ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு கூடுதல் கவலைதரும் விதமாக அமைத்துள்ளது. குறிப்பாக, கொல்கத்தாவின் பாட் கம்மின்ஸ்க்கு எதிராக இவர்கள் ரன்களை வாரி வழங்கி இருந்தனர்.

மறுபுறம், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 2 வெற்றி (கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வி (பஞ்சாப்புக்கு எதிராக) என்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் நல்ல நிலையில் உள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அமர்க்களமான பேட்டிங் அந்த அணி வெற்றியை ருசிக்க உதவியது.

பெங்களுரு அணி விராட் கோலி, பிளெசிஸ், தினேஷ் கார்த்திக், ஷபாஸ் அகமது என தரமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. தற்போது ஆல்-ரவுண்டர் வீரர் கிளைன் மேக்ஸ்வெல் அணியில் இணைந்திருப்பது அணிக்கு அசுர பலத்தை கொடுத்துள்ளது. வேகப்பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் நெருக்கடி கொடுத்து தகுந்த நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். இதேபோல், ஹசரங்காவின் சுழல் மாயாஜாலம் எதிரணிக்கு குடைச்சல் கொடுக்கிறது.

நடப்பு தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள மும்பை அணி சரிவில் இருந்து எழுச்சி பெற்று வெற்றிக்கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேவேளையில் 2 தொடர் வெற்றியால் உற்சாகத்தில் உள்ள பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • மும்பை வெற்றி - 19
  • பெங்களூரு வெற்றி - 12

உத்தேச அணி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்/ கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

மும்பை இந்தியன்ஸ் - இஷான் கிஷன், ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டேனியல் சாம்ஸ்/ ஃபின் ஆலன்/ ரிலே மெரிடித், டெவால்ட் ப்ரீவிஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி/ஜெய்தேவ் உனத்கட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான்
  • பேட்டர்ஸ் - ஃபாஃப் டு பிளெசிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்க, டெவால்ட் ப்ரீவிஸ்
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், முருகன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை