ரியான் பராக்கை விமர்சித்த வர்ணனையாளர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 வயது ரியான் பராக்கை ஏலத்தில் ரூ. 3.80 கோடிக்குத் தேர்வு செய்தது . இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் 5, 12 எனக் குறைவாகவே ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் விக்கெட்டும் எடுக்கவில்லை.
கடந்த 2019 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் ரியான் பராக், இதுவரை 33 ஆட்டங்களில் விளையாடி 356 ரன்களும் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 1 அரை சதம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ரியான் பரக்கின் தேர்வை நியூசி. முன்னாள் வீரரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான சைமன் டோல் விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் ஒருவர் கூறியதாவது, “ரியான் பராக்கை ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது குறித்த சைமன் டோலின் விமர்சனம் நியாயமானது. அவர் குறைவான ரன்களே எடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய விமர்சனத்தின் முடிவில், ரியான் பராக், சமூகவலைத்தளங்களில் நட்சத்திரமாக இருக்கலாம். அது ஆட்டத்துக்கு உதவாது என்றார்.
தொலைக்காட்சி வர்ணனையில் இதை ஏன் அவர் தெரிவிக்க வேண்டும்? சமூகவலைத்தளப் பதிவுகளுக்காக ஏற்கெனவே பலவிதமாக ரியான் பராக் விமர்சிக்கப்படுகிறார். சைமன் டோலின் கருத்தால் அவரை இன்னும் ஆழமாகக் கவனிப்பார்கள். கிரிக்கெட் காரணங்கள் குறித்து தான் ஒரு வர்ணனையாளர் பேசவேண்டும். அந்த வீரரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அல்ல” என்றார்.
தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சைமன் டோல். அவர் கூறியதாவது:
என் குற்றச்சாட்டில் உள்ள ஒரு முக்கியமானக் கருத்தைத் தவறவிட்டு விட்டீர்கள். சமூகவலைத்தளங்களில் அவர் புகழ்பெற்றவராகவும் எல்லோராலும் விரும்பப்படுகிறவராகவும் தெரிகிறது. ஆனால் மைதானத்தின் நடுவில் இது எதுவும் உதவாது. ரன்களும் ஸ்டிரைக் ரேட்டுகளுமே முக்கியம். அது போதுமானதாக இல்லை என்பது என் கருத்து. ஒருவேளை, சொல்ல வந்ததை நான் சரியாகச் சொல்லாமல் இருக்கலாம். சின்ன மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டை ரசிக்கவும் என்று தெரிவித்தார்.