விஜய் ஹசாரே கோப்பை: ஒரே போட்டியில் பல்வேறு சாதனை படைத்த கெய்க்வாட்!

Updated: Tue, Nov 29 2022 10:04 IST
Image Source: Google

இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் லீக் சுற்றில் அசத்திய தமிழ்நாடு உள்ளிட்ட 8 அணிகள் மோதிய காலிறுதி சுற்று நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற உத்திரபிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மகாராஷ்டிரா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 330/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இரட்டை சதமடித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் குவித்தார்.

அதை தொடர்ந்து 331 ரன்களை துரத்திய உத்தர பிரதேச அணிக்கு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் அதிரடியாக விளையாடி 18 பவுண்டரி 3 சிக்ஸருடன் அதிகபட்சமாக 159 ரன்கள் எடுத்தாலும் இதர வீரர்கள் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 47.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 272 ரன்களுக்கு அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய மகாராஷ்டிரா சார்பில் அதிகபட்சமாக ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மகராஷ்டிரா அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

முன்னதாக இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் உத்திர பிரதேச பவுலர்களை அடித்து நொறுக்கிய ருதுராஜ் கெய்க்வாட் சிவா சிங் வீசிய 49ஆவது ஓவரில் நோபால் உட்பட 7 பந்துகளில் 7 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்தார். இதற்கு முன் யுவராஜ் சிங், கீரென் பொல்லார்ட், ஹெர்சல் கிப்ஸ், ரவி சாஸ்திரி போன்ற குறிப்பிட்ட சிலர் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ள நிலையில் 7 சிக்ஸர்களை அடித்த முதல் வீரராக அவர் வரலாறு படைத்துள்ளார்.

அத்துடன் 42 ரன்களை அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை சமன் செய்தார். சொல்லப்போனால் கடந்த 2018இல் நியூசிலாந்தின் ஹமில்டன் நகரில் நடந்த ஒரு லிஸ்ட் ஏ போட்டியில் பிரட் ஹாம்ப்டன் (23) ஜோ கார்ட்டர் (18) என 2 வீரர்கள் சேர்ந்து தான் இதற்கு முன்பு 42 ரன்கள் அதிகபட்சமாக அடித்துள்ளார்கள்.

இப்போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையையும் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை அடித்த இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 16 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

மேலும் விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (16) அடித்த பேட்ஸ்மேன் என்ற தமிழக வீரர் நாராயன் ஜெகதீசன் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த வாரம் அருணாச்சல பிரதேசத்துக்கு எதிராக ஜெகதீசன் 15 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த மகாராஷ்டிரா வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் பாண்டிச்சேரி அணிக்கு எதிராக கடந்த வாரம் அன்கிட் பாவ்னே 184 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

மேலும் 220 ரன்களை காலிறுதிப் போட்டியில் அடித்த அவர் விஜய் ஹசாரே கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் படைத்தார். இதற்கு முன் கடந்த 2021இல் கர்நாடக வீரர் ரவிக்குமார் கேரளாவுக்கு எதிராக 192 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் நாக் அவுட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் (16) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக அதே நாளன்று ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக அசாம் வீரர் ரியான் பராக் அதிகபட்சமாக 12 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். 3ஆவது இடத்தில் நியூசிலாந்தின் மாட்டின் கப்டில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை