கேப்டன்சி என்பது மிகவும் சிக்கலான விஷயம் - ருதுராஜ் கெய்க்வாட்!
நேற்று அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ஆடுகளம் மெதுவாக இருந்ததை உணர்ந்து மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
வருகின்ற பேட்ஸ்மேன்களை இணைத்துக் கொண்டு அவர் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே சமயத்தில் அடித்து ஆட முயற்சி செய்த பொழுது அவரது விக்கட்டை இழந்தார். நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு அவருடைய ஆட்ட அணுகுமுறை மற்றும் கேப்டன்சி எப்படியானது என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “கேப்டன்சி என்பது மிகவும் சிக்கலான விஷயம் என்று நான் நினைக்கிறேன். தோனி எப்பொழுதும் சொல்வது என்னவென்றால் ஒரு நேரத்தில் ஒரு விளையாட்டு பற்றி மட்டும் நினைத்து விளையாடுங்கள். தற்போதைய தருணத்தில் இருங்கள். எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். எல்லோரும் இங்கு ஹைப் உருவாக்குவார்கள். நான் சமூக ஊடகங்களை பார்த்து என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கக்கூடிய நபர் கிடையாது.
சிஎஸ்கே அணியில் நான் கற்றுக்கொண்ட பண்புகளில் இதுவும் முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். களத்தில் சிறந்ததை கொடுப்பது, வீட்டிற்கு திரும்பி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவற்றில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நான் வீரர்களின் மனநிலைக்குள் சென்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறேன். சில சமயங்களில் பேட்டர் மற்றும் பவுலர்கள் தங்களுக்கு என்று தனியான யோசனையை வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து விளையாட்டை சிந்திக்கிறார்கள். நான் அதை உணர்கிறேன். மேலும் அதை நான் ஆதரிப்பது முக்கியம். ஆட்டத்திற்குப் பிறகு அதில் என்ன தவறு நடந்தது என்று ஆலோசித்து சரி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக விளையாட்டில் இது வீரர்களுக்கு சுதந்திரம் அளிப்பது பற்றியது. முதலில் அவர்கள் அவர்களை நம்புகிறார்களா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு சொல்லப்படும் பலவிதமான யோசனைகள் அவர்களை குழப்பத்தில் தள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.