சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான் போட்டியை புறக்கணிக்கிறதா தென் ஆப்பிரிக்கா?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெறவுள்ளது. இதில் இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியானது பிப்ரவரி 21ஆம் தேதி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தங்கள் முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இநிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கொப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென் ஆப்பிரிக்க அணி தவிர்க்கும் மாறும் அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஏனெனில் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின் பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக விளையாட்டில் பெண்கள் பங்கேற்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது, இது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேரடியாக மீறிவருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க விளையாட்டு துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி கூறுகையில், “தெளிவாகச் சொல்லப் போனால், ஐசிசி விளையாட்டில் சமத்துவக் கொள்கையை அங்கீகரிக்கிறது, மேலும் உறுப்பு நாடுகள் ஆண் மற்றும் பெண் வீரர்களை வளர்க்க வேண்டும். ஆனால் ஆஃப்கானிஸ்தானில் இது அப்படி இல்லை, விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு அங்கு பொறுத்துக்கொள்ளப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.
அதேபோல், அரசியல் தலையீட்டிற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் 2023 இல் தடைசெய்யப்பட்டது நினைவிருக்கலாம்.பெரும்பாலான சர்வதேச விளையாட்டு அமைப்புகளைப் போலவே, ஐசிசியும், விளையாட்டு நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை பொறுத்துக்கொள்ளாது என்று கூறுவதை நான் அறிவேன். இது ஆஃப்கானிஸ்தானின் நிலையாக இருந்தாலும் கூட.
தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டுமா இல்லையா என்பது குறித்து விளையாட்டு அமைச்சர் என்ற முறையில் இறுதி முடிவு எடுப்பது எனது பொறுப்பல்ல. இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி நிச்சயமாக விளையாடாது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இதே காரணங்களை மேற்கோள் காட்டி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடக்கூடாது என அந்நாட்டு அரசியல் வாதிகள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.