SA vs BAN: தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது வங்கதேச அணி. ஒருநாள் தொடர் மார்ச் 18 அன்றும் டெஸ்ட் தொடர் மார்ச் 30 அன்றும் தொடங்குகின்றன.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 8 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். நோர்ட்ஜே, மகாலா ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
ஒருநாள் தொடர் ஐபிஎல் தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, மார்ச் 23 அன்று நிறைவுபெறுகிறது. இதனால் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள ரபாடா, இங்கிடி, வான் டர் டுசென், டேவிட் மில்லர், குயிண்டன் டி காக், மார்க்ரம், டுவைன் பிரிடோரியஸ், மார்கோ ஜான்சென் ஆகிய 8 வீரர்களும் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது.
ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து வீரர்களும் மூன்று நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் கரோனா தடுப்பு வளையத்துக்குள் அவர்களால் நுழைய முடியும். இதன் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வீரர்களால் ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களில் இடம்பெறுவது கடினம்.
மேலும் மார்ச் 31 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் தொடரா அல்லது டெஸ்ட் தொடரா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பதை வீரர்களே முடிவு செய்துகொள்ளலாம் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
எனினும் ரபாடா, என்கிடி, வான் டர் டுசென், மார்க்ரம், யான்சென், நோர்கியா ஆகிய ஆறு தென் ஆப்பிரிக்க டெஸ்ட் வீரர்கள், டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார்களா அல்லது ஐபிஎல் போட்டியைத் தேர்வு செய்வார்களா என்கிற கேள்விக்கான விடை இதுவரை தெரியவில்லை. இதை விசுவாசப் பரீட்சையாக எல்கர் பார்ப்பதால் வீரர்களும் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), கேசவ் மஹராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டி காக், ஜுபைர் ஹம்சா, மார்கோ ஜான்சன், ஜென்மேன் மாலன், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வெய்ன் பார்னெல், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் ப்ரிடோரியஸ் , ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன்.