SA vs AUS, 3rd ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Updated: Tue, Sep 12 2023 23:32 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - டெம்பா பவுமா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 82 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து டெம்பா பவுமா 57 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதில் அரைசதத்தை நெருங்கிய ரீஸா ஹென்றிக்ஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக, அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தை நிரைவு செய்தார். 

அவருடன் இணைந்த மார்கோ ஜான்செனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களை எடுத்திருந்த மார்கோ ஜான்சென், சீன் அபேட்டின் அபாரமான கேட்சினால் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 74 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 104 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து கடின  இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களில் 104 ரன்களைக் குவித்தது. அதன்பின்னும் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 73 ரன்களை எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 15, அலெக்ஸ் கேரி 12, மார்கஸ் ஸ்டொய்னிஸ் 10, டிம் டேவிட் 8, சீன் அபெட் 2 ரன்கள் என ஆட்டமிழக்க, பிறகு களமிறங்கிய வீரர்களாலும் சோபிக்க முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும், தப்ரைஸ் ஷம்ஸி, கேசவ் மகாராஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் நீடிக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை