SA vs BAN, 3rd ODI: டஸ்கின் அஹ்மத் அபாரம்; வரலாறு படைக்குமா வங்கதேசம்?

Updated: Wed, Mar 23 2022 19:29 IST
SA vs BAN, 3rd ODI: Bangladesh restricted South Africa by 154 runs (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி, தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது.

இதற்கு பதிலடி தரும் வகையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் - ஜென்மன் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் டி காக் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கைல் வெர்ரெயின், கேப்டன் டெம்பா பவுமா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் வந்த ரஸ்ஸி வெண்டர் டூசென் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஜென்மன் மாலன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் - டுவைன் பிரிட்டோரியஸ் இணை சிறுது நேரம் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தது. ஆனால் 16 ரன்களில் மில்லரும், 20 ரன்களில் பிரிட்டோரியஸும் டஸ்கின் அஹ்மத் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேஷவ் மஹாராஜ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

இதனால் 37 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அஹ்மத் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன் மூலம் 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடவுள்ளது. மேலும் இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்றால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறை ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை