SA vs IND, 1st ODI: பவுமா, வெண்டர் டுசென் சதம்; இந்தியாவுக்கு 297 இலக்கு!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஆணியில் ஜென்மன் மாலன் 6 ரன்னிலும், குயிண்டன் டி காக் 26 ரன்னிலும், ஐடன் மார்க்ரம் 4 ரன்களும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா - ரஸ்ஸி வெண்டர் டுசென் இணை ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இவர்கள் இருவரையும் வெளியேற்ற முடியாமல் இந்திய பந்துவீச்சாளர் தடுமாறினர்.
இறுதியில் 110 ரன்களைச் சேர்த்திருந்த டெம்பா பவுமா, பும்ரா பந்துவீச்சில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 296 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 115 ரன்களையும், டெம்பா பவுமா 110 ரன்களையும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடவுள்ளது.