SA vs IND, 3rd ODI: டி காக் அபார சதம்; இந்திய அணிக்கு 288 ரன்கள் இலக்கு!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஜே மலான் ஒரு ரன்னில் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் டெம்பா பவுமா 8 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேற, மார்க்ரமும் 15 ரன்னில் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார். 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட தென் ஆப்பிரிக்க அணியை டி காக்கும் வேண்டர் டுசெனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து விளையாடிய குயிண்டன் டி காக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 17ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். டி காக்கும் வாண்டர் டசனும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 144 ரன்களை குவித்தனர். 130 பந்தில் 124 ரன்கள் அடித்த டி காக் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் அரைசதம் கடந்திருந்த வெண்டர் டுசெனும் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்துவீச்சில் வெளியேறினார்.
இறுதியில் டேவிட் மில்லர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 49.5 ஓவர்கள் முடுவில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிக பட்சமாக டி காக் 124 ரன்களும், வெண்டர் டூசென் 52 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, தீபக் சஹார், ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.