SA vs IND, 3rd Test: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Fri, Jan 14 2022 17:19 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தன.

அதன்பின் 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 198 ரன்களுக்கு ஆட்டமிழந்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

அதன்படி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தன.

இந்த நிலையில் 4ஆம் நாள் ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 48 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடங்கிய கீகன் பீட்டர்சன் அரைசதம் கடந்தார். ராசி வான்டர் டூசனும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து பாட்னர்ஷிப் அமைத்தார்.

இந்த இணை விக்கெட்டை இழக்காமல் ரன்களைக் குவிக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்துகொண்டே இருந்தது.

பீட்டர்சன் 82 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டூசனுடன் இணைந்து டெம்பா பவுமாவும் நிதானம் காட்டத் தொடங்கினார்.

இதனால் 4ஆம் நாள் உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. அதன்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை தென் ஆப்பிரிக்க அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 63.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளை கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை