SA vs NED: சதத்தை தவறவிட்ட வெர்ரெயின்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்ஞ்சுரியனில் இன்று நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜென்மேன் மாலன் 16 ரன்னிலும், ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சுபைர் ஹம்சா- கைல் வெர்ரெயின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின்னர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கைல் வெர்ரெயின் 95 ரன்னில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவருடன் இணைந்து விளையாடிய சுபைர் ஹம்சாவும் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர், சோண்டா, வெய்ன் பார்னெல் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்லே பெஹ்லுக்வாயோ அதிரடியாக விளையாடி 6 சிக்சர்களை விளாசினார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக வெர்ரெயின் 95 ரன்களையும், ஹம்சா 56 ரன்களையும், பெஹ்லுக்வாயோ 48 ரன்களையும் சேர்த்தனர்.