SA vs WI, 1st Test: ரபாடா வேகத்தில் நிலை குழைந்த விண்டீஸ்; இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Jun 13 2021 14:40 IST
SA vs WI, 1st Test: South Africa won by an innings and 63 runs (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி செயிண்ட் லூசியாவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் கேப்டன் பிராத்வெயிட், ஷாய் ஹோப், போனர், ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், ஹொல்டர் என அனைவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

இதனால் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி ஐந்து விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் அரசதம் கடந்தும், டி காக் சதமடித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 322 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 141 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 60 ரன்களையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் 225 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிரேக் பிராத்வெயிட் 7 ரன்களிலும், கிரேன் பாவல் 14 ரன்களிலும் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் நோர்ட்ஜே பந்துவீச்சில் நடையைக் கைட்டினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் நின்று விளையாடிய ரோஸ்டன் சேஸ் அரைசதம் கடந்தார். 

பின் ரோஸ்டன் சேஸ் 62 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை