எஸ்ஏ20 2024: ஹென்ரிச் கிளாசென் சிக்சர் மழை; கேப்டவுனை வீழ்த்தியது டர்பன்!

Updated: Fri, Jan 12 2024 11:49 IST
எஸ்ஏ20 2024: ஹென்ரிச் கிளாசென் சிக்சர் மழை; கேப்டவுனை வீழ்த்தியது டர்பன்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ 20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் - ரியான் ரிக்கெல்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 24 ரன்கள் எடுத்திருந்த வேண்டர் டுசென் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் 5 ரன்களுக்கும், கானர் எஸ்டெர்ஹூய்சென் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரிக்கெல்டன் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த லியாம் லிவிங்ஸ்டோனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 87 ரன்களை எடுத்த நிலையில் கீமோ பால் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதனைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லியாம் லிவிங்ஸ்டோனும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கீரென் பொல்லார்ட்டும் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 31 ரன்களை விளாசினார். இதன்மூலம் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களைக் குவித்தது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் கீமோ பால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிட டர்பன் அணிக்கு குயின்டன் டி காக் - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 5 ரன்களில் வெளியேர, அடுத்து களமிறங்கிய வியான் முல்டரும் 5 ரன்களுடனு நடையைக் கட்டினார். பின்னர் பிரீட்ஸ்கியுடன் இணைந்த கீமோ பால் ஓரளவு தாக்குப்பிடித்து 15 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ பிரீட்ஸ்கி 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசென் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 4 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 85 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

பின்ன வந்த டுவைன் பிரிட்டோரியஸ் - சுப்ராயன் இணை களத்தில் இருந்தனர். அப்போது 16.3 ஓவர்களில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தினால் டக்வொர்த் லூயிஸ் முறையில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை