எஸ்ஏ20 2024: மார்கோ ஜான்சென் அதிரடி அரைசதம்; பார்ல் ராயல்ஸுக்கு 209 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடியது. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஜோர்டன் ஹார்மன் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் மாலன் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஹார்மன் - டாம் அபெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதத்தை நேருங்கிய டாம் அபெல் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜோர்டன் ஹார்மனும் 36 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கோ ஜான்சென் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
ஆனால் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சென் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்தா டிரிஸ்டன் ஸ்டப்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கோ ஜான்சென் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 71 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 22 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களைக் குவித்துள்ளது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் எவான் ஜோன்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.