SA20 League 2nd SF: சதமடித்து மிரட்டிய மார்க்ரம்; ஜேஎஸ்கேவுக்கு இமாலய இலக்கு!
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் பந்துவீச தீர்மானித்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க வீரர்கள் டெம்பா பவுமா, ஆடம் ரோஸிங்டன் ஆகியோர் அடுத்தடுத்து லிசாத் வில்லியம்ஸின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - ஜோர்டன் ஹார்மன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹார்மன் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 57 பந்துகளில் சதமடித்து தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஹென்ரிச் கிளாசெனுக்கு அடுத்து இந்த தொடரில் சதமடித்த 3ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சதமடித்த கையோடு 57 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 100 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடந்து வந்த அதிரடியாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 20 ரன்களில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் கடைசி ஓவரில் மார்கோ ஜான்சென், ஜோர்டன் காக்ஸ் இருவரும் இணைந்து 27 ரன்களைக் குவித்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களைக் குவித்தது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் லிஸாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.