சச்சின் - லாராவை கவுரவித்த சிட்னி கிரிக்கெட் மைதானம்!
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரவையும் சிட்னி கிரிக்கெட் மைதானம் கவுரவித்துள்ளது. அவர்களின் நினைவாக மைதானத்தின் வாயிலுக்கு அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வருகை தரும் அனைத்து வீரர்களும் இப்போது புதிதாக பெயரிடப்பட்ட லாரா-டெண்டுல்கர் கேட்ஸ் வழியாக களம் இறங்குவார்கள். டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளை ஒட்டி இவ்விருவருக்கும் இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
லாரா மற்றும் சச்சினின் கிரிக்கெட் கேரியரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு பிரத்யேக இடம் உள்ளது. லாரா, தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தது சிட்னி மைதானத்தில்தான். 1993-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்திருந்தார் அவர்.
சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக இந்த மைதானத்தில் 241 ரன்கள் எடுத்துள்ளார். இங்கு இவரது பேட்டிங் சராசரி 157. லாரா, சிட்னி மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
“இந்தியாவுக்கு வெளியே சிட்னி கிரிக்கெட் மைதானம் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று. எனது முதல் ஆஸ்திரேலிய (1991-92) பயணத்தில் இருந்து இனிதான நினைவுகளை இந்த மைதானத்துடன் கொண்டுள்ளேன்” என சச்சின் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.