இங்கிலாந்து வீரர்கள் ஸ்பின்னர்களை கணித்து விளையாட வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் வெறும் 215 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் மட்டும் 62 ரன்களை எடுத்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி மொத்தமாக ஸ்பின்னர்களிடம் 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது. அதன்பின் விளையாடிய 14 உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்த நிலையில், டெல்லியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியையே சம்பவம் செய்து அசத்தியுள்ளது. இரு தரமான வேகப்பந்துவீச்சாளர்கள், 3 தரமான ஸ்பின்னர்கள் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி சாதித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு சுழற்பந்துவீச்சாளர்களிடம் திணறியதே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில், “இன்றைய ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களின் எனர்ஜி மிகச்சிறப்பாக இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். அதற்கு குர்பாஸின் அபாரமான பேட்டிங் முதன்மை காரணமாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு இது மோசமான நாள். எந்தவொரு பேட்ஸ்மேனும் தரமான ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடும் போது, அவர்களது கையில் பந்து இருக்கும் போது கணிக்க வேண்டும். அவர்கள் பந்தை எப்படி ரிலீஸ் செய்கிறார்கள், அப்படி ரிலீஸ் செய்தால் எப்படி பந்து திரும்பும் என்பதை பேட்ஸ்மேனாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இதனை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்ய தவறிவிட்டனர். அதுதான் அவர்களின் சரிவுக்கு காரணமாக இருந்ததாக பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.