லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் சச்சின் பங்கேற்கவில்லை!
இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்ததாகப் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளார் ரவி சாஸ்திரி. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் எனப்படும் எல்.எல்.சி. போட்டியின் ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எல்.எல்.சி. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இத்தொடர் ஜனவரி 20 முதல் மஸ்கட், ஓமன் பகுதிகளில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங், முகமது கைஃப், ஸ்டூவர்ட் பின்னி, இர்பான் பதான், யூசுப் பதான் போன்றோர் இந்திய மஹாராஜா அணியில் விளையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
அமிதாப் பச்சன் இடம்பெறும் விளம்பரமும் இதற்காக வெளியிடப்பட்டது. சோயிப் அக்தர், ஷாஹித் அஃப்ரிடி, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், கலுவிதரனா, தில்ஷன், அசார் முகமது, உபுல் தரங்கா, மிஸ்பா உல் ஹக், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது யூசுப், உமர் குல், அஸ்கார் ஆஃப்கன் போன்ற வீரர்களும் போட்டியில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எல்.எல்.சி. போட்டியில் சச்சின் கலந்துகொள்வதாக வெளியான செய்திகள் தவறானவை என சச்சின் டெண்டுல்கள் தரப்பான எஸ்.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. போட்டி அமைப்பாளர்கள் கிரிக்கெட் ரசிகர்களையும் அமிதாப் பச்சனையும் தவறாக வழிநடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.