உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தியுள்ளோம் - சனத் ஜெயசூர்யா!

Updated: Thu, Aug 08 2024 15:20 IST
Image Source: Google

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

அதன்படி இப்போடியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 98 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்தததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சோபிக்க தவறினர். 

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் 138 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசியுள்ள இலங்கை அணி பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, இத்தொடருக்கு முன்னதாக நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜூபினை வரவழைத்து, அவருடன் இணைந்து ஏழு நாள் பயிற்சி திட்டத்தை தயார் செய்தோம். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றிய போது நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அதில் நீண்ட இன்னிங்ஸை எப்படி விளையாடுவது போன்றவற்றை நிறைய கற்றுக்கொண்டோம். 

அதன்படி எங்கள் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 2-3 மணி நேரம் பேட்டிங் பயிற்சியை செய்தார். இது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இதுபோண்ட போட்டியில் வீரர்களுக்கு நம்பிக்கை மட்டுமே தேவை. அதன்படி போட்டியின் போது சிலர் நன்றாக பேட்டிங் செய்து ரன்களைச் சேர்த்தனர், சில பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தியது என அனைவ்ரும் ஒரு அணியாக செயல்பட்டது வீரர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. 

இதன்மூலம் நாள் முடிவில் நாங்கள் உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தி தொடரை வென்றுவிட்டோம். இலங்கை கிரிக்கெட் அணியானது தற்சமயம் புதிய பயிற்சியாளரைத் தேடிவருகிறது. நான் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் மட்டுமே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் அவர்கள் அணியின் முழுநேர பயிற்சியாளரை தேடிவருகின்றனர். நான் அவர்களுக்கான தற்காலிக பொறுப்பாளராக மட்டுமே இருக்கிறேன். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனாலும் நான் இலங்கை கிரிக்கெட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் என்னுடன் இணைந்து பணியாற்றும் உதவியாளர்கள் மற்றும் அணி வீரர்களுக்கு முடிந்த அனைத்தையும் செய்துவரும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். மேலும், இந்த இளைஞர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப் பயணத்தை தொடர நல்ல பயிற்சியாளரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை