இந்திய கிரிக்கெட்டராக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல - சஞ்சு சாம்சன்!

Updated: Wed, Aug 02 2023 12:04 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் இசான் கிஷான் இருவரும் அரை சதங்கள் அடித்து அபாரமான துவக்கம் தந்தார்கள். இந்த ஜோடி 143 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கும் நான்காவது இடத்தில் வந்த சஞ்சு சாம்சன், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் இருந்த நம்பிக்கையை அப்படியே சீர்குலைத்தார். உள்ளே நுழைந்ததும் அவரது பேட்டில் இருந்து பந்துகள் அவ்வளவு துல்லியமாக சிக்ஸர்களுக்கு பறந்தன. அவருடைய ஷாட் ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தன.

அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நேற்று அவர் அடித்த 51 ரன்களிலேயே எல்லா பதிலையும் சொல்லிவிட்டார். கில் உடன் சேர்த்த 69 ரன் பார்ட்னர்ஷிப்பில் சாம்சன் எடுத்த ரன்கள் மட்டும் 51. அணியில் தனக்கான இடத்தைப் பற்றி கவலைப்படாமல், களத்தில் உள்ளே வந்து என்ன தேவையோ? அதை மிக தைரியமாக செய்தார்.

நேற்று இந்திய அணி 351 ரன்களுக்கு செல்ல ஆட்டத்தின் நடுவில் சஞ்சு சாம்சனின் அதிரடியான மற்றும் நேர்த்தியான ஆட்டம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. இறுதிக்கட்டத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது அனுபவத்தையும் திறமையையும் காட்ட எல்லாம் நல்லபடியாக முடிந்து, 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

போட்டியின் முடிவுக்கு பின் பேசிய சஞ்சு சாம்சன், ”நான் ஆட்டத்தின் நடுவில் சென்று ஆடுகளத்தில் நேரம் செலவு செய்து, அணிக்காக ரன்களை கொண்டு வந்ததில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கும் தனித்தனி திட்டங்களை வைத்திருந்தேன். நான் என் கால்களை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் லென்த்தை மாற்ற வைத்து அவர்கள் மீது ஆதிக்கம் செய்ய விரும்பினேன்.

இந்திய கிரிக்கெட்டராக இருப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அது மிகவும் சவாலான ஒரு விஷயம். பேட்டிங் வரிசையில் பல இடங்களில் பேட்டிங் செய்வது பழகிய ஒன்றுதான். ஏனென்றால் கடந்த எட்டு ஒன்பது வருடமாக இந்தியாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்படி விளையாடி விளையாடி பழகிவிட்டது. இதனால் பல்வேறு நிலைகளில் விளையாடுவதை பற்றிய புரிதல் ஏற்பட்டு இருக்கிறது. இது நீங்கள் அணியில் பேட்டிங் வரிசையில் பெறும் இடம் மற்றும் விளையாடும் பந்துகளில் எண்ணிக்கையை பற்றியது கிடையாது. எனவே இதற்கு ஏற்றபடி நீங்கள் தயாராக வேண்டும்.

இரண்டாவது போட்டி நடந்த ஆடுகளம் சற்று ஈரமாக இருந்தது. இந்தப் போட்டியின் ஆடுகளம் நன்கு உலர்ந்து காணப்பட்டது. புதிய பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. அதே சமயத்தில் பந்து பழையதாக மாறிய பின்பு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது. இந்த ஸ்கோரை அடிப்பது எளிதான விஷயம் கிடையாது. இதற்கான பெருமை நம் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சேரும். எங்களது பந்துவீச்சு நம்பிக்கையான ஒன்றுதான்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை