பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை!
தற்பொழுது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆசியக் கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல் மற்றும் இசான் கிஷான் இருவரும் சேர்க்கப்பட்டார்கள். அதே வேளையில் ரிசர்வ் வீரராக வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனும் அணிக்கு வெளியில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கை சென்று இருக்கிறது. இந்திய அணி உடன் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் செல்லவில்லை. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவிக்கும்போது “கே.எல்.ராகுலுக்கு காயம் குணமடைந்து விட்டது ஆனால் அவருக்கு சிறிது நிகில் இருக்கிறது. எனவே முதல் இரண்டு ஆட்டங்களில் அவர் பங்கேற்க மாட்டார். அதற்கு அடுத்து அவர் குணமடைந்து விடுவார் என்று நம்புகிறோம். அதுவரையில் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருப்பார்” என்று கூறினார்!
இந்த நிலையில் நாளை இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிக முக்கியமான போட்டியில் ஆசிய கோப்பையில் இலங்கையில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கான விக்கெட் கீப்பராக யாரிடம் பெறுவார்கள் என்கின்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது. கேஎல்.ராகுல் இல்லாத நிலையில் ஈசான் கிஷான்தான் விக்கெட் கீப்பராக விளையாடுவார். சஞ்சு சாம்சனால் விளையாட முடியாது என்பதுதான் நிதர்சனம். காரணம் அவர் 17 பேர் கொண்ட முக்கிய அணியில் இடம் பெறவில்லை. அவர் ரிசர்வ் வீரராக மட்டுமே அணியில் தொடர்கிறார்.
எனவே சஞ்சு சாம்சனை முக்கிய அணியில் எடுக்க வேண்டும் என்றால், 17 பேர் கொண்ட அணியில் இடம் பெற்ற யாரையாவது நீக்க வேண்டும். அப்படி யாரையாவது நீக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஏதாவது காயம் இருக்க வேண்டும். அதற்கான உரிய சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு வீரர் விலகிக் கொள்ளலாம்.
தற்பொழுது கே எல் ராகுலை அணியில் இருந்து விலக்கினால் மட்டுமே சஞ்சு சாம்சனை விளையாட வைக்க முடியும். ஆனால் அவரை முதன்மை விக்கெட் கீப்பராக இந்திய அணி நிர்வாகம் கருதுவதால் நிச்சயம் நீக்க மாட்டார்கள். ஒருவேளை காயம் இரண்டு போட்டிகள் தாண்டியும் குணமடையாவிட்டால் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே சஞ்சு சாம்சனால் இந்திய அணியில் தற்போது இடம்பெற்று கே.எல்.ராகுல் இடத்தில் விக்கெட் கீப்பராக விளையாட முடியாது.