டி10 லீக்: அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராக சாரா டெய்லர் நியமனம்!

Updated: Sat, Oct 30 2021 15:36 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் ஆடும் கிரிக்கெட் போட்டிகள் தான் பெரும் ரசிகர் கூட்டத்தால் பார்க்கப்படுகிறது. அதனால் ஆடவர் கிரிக்கெட்டுக்குத்தான் தான் வியாபார ரீதியாக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது. மகளிர் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவமும் குறைவு; அதை பார்ப்பவர்களும் மிகக்குறைவு.

ஆனாலும், ஆடவர் கிரிக்கெட்டையும் கடந்து மகளிர் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க வைத்தனர் சில மகளிர் வீராங்கனைகள். மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா ஆகிய இந்திய வீராங்கனைகளை போல, மகளிர் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததில் முக்கியமானவர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்டர் சாரா டெய்லர். ரசிகர்களை மட்டுமல்லாது, முன்னணி கிரிக்கெட் வீரர்களையும் தனது திறமையால் கவர்ந்தவர் சாரா.

கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஆடிய சாரா டெய்லர், இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளிலும், 126 ஒருநாள் போட்டிகளிலும், 90 டி20 போட்டிகளிலும் விளையாடி 6000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்பெஷலே விக்கெட் கீப்பிங் தான்.

ஆடவர் கிரிக்கெட்டில் ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், குமார் சங்கக்கரா, தோனி உள்ளிட்ட பல அருமையான விக்கெட் கீப்பர்களை பார்த்திருக்கிறோம். இவர்களுக்கு சற்றும் சளைத்திராத திறமையான விக்கெட் கீப்பர் தான் சாரா டெய்லர். தோனி கண்ணிமைக்கும் நொடியில், மின்னல் வேகத்தில் எத்தனையோ ஸ்டம்பிங்குகள் செய்து பார்த்திருக்கிறோம். அதே வேகத்தில் மகளிர் கிரிக்கெட்டில் செயல்பட்ட விக்கெட் கீப்பர் தான் சாரா டெய்லர். துரிதமான செயல்பாட்டில் இவர் தோனியை போன்றவர்.

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரும், அபார திறமைசாலியுமான ஆடம் கில்கிறிஸ்ட்டே, திறமையில் என்னை விட சிறந்தவர் சாரா டெய்லர் என்று பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய மகளிர் விக்கெட் கீப்பர்களில் 136 விக்கெட்டுகளுடன் 2ஆம் இடத்தில் இருக்கிறார் சாரா டெய்லர். 51 ஸ்டம்பிங்குகளுடன், அதிகமான ஸ்டம்பிங் செய்த மகளிர் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்தியாவின் ஏ.ஜெயினுடன் பகிர்ந்துகொள்கிறார் சாரா டெய்லர்.

தான் கிரிக்கெட் ஆடிய காலத்தில் தனது திறமையால் அனைவரையும் மெய்சிலிர்க்க செய்த சாரா டெய்லர், ஓய்வுக்கு பிறகு தனது திறமையை வீணடிக்காமல் பலரை உருவாக்கும் பயிற்சியாளர் பொறுப்பை கையிலெடுத்துள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை