ரஞ்சி கோப்பை 2022: சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம்!
ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது. ஆமதாபாத்தில் மும்பை - செளராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. பிருத்வி ஷா தலைமையிலான மும்பை அணியில் ரஹானேவும் உனாட்கட் தலைமையிலான அணியில் புஜாராவும் இடம்பெற்றுள்ளார்கள்.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த மும்பை அணி சிறப்பாக விளையாடியுள்ளது. ரஹானே 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 24 வயது சர்ஃபராஸ் கான் அபாரமாக விளையாடி மும்பை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 345 பந்துகளில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு 250 ரன்களும் எடுத்துக் கடைசியாக 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 157 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
கடந்த 9 ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் இரு இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார் சர்ஃபராஸ் கான். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி சர்ஃபராஸ் கானை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணிக்குத் தேர்வாகி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற சர்ஃபராஸ் கான், ஓர் ஆட்டத்தில் 71 ரன்கள் எடுத்தார். இதனால் விரைவில் இந்திய அணிக்குத் தேர்வாவார் என்கிற எதிர்பார்ப்பு சர்ஃபராஸ் கான் மீது ஏற்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பை: கடைசி 9 இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் எடுத்த ரன்கள்
- 71*(140)
- 36(39)
- 301*(391)
- 226*(213)
- 25(32)
- 78(126)
- 177(210)
- 6(9)
- 275(401)