SCO vs NZ, 2nd T20I: சாப்மேன், பிரேஸ்வெல் காட்டடி; ஸ்காட்லாந்துக்கு 226 டார்கெட்!
ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்று முன்னிலையும் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இதில் கடந்த போட்டியில் சதம் விளாசிய ஃபின் ஆலன் 6 ரன்களிலும், தனே கிளெவர் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்க் சாப்மன் - டெரில் மிட்செல் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மிட்செல் 31 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க் சாப்மேன் அரைசதம் கடந்தார். அதன்பின் அவரும் 83 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இருப்பினும் இறுதியில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய மைக்கேல் பிரேஸ்வெல் 22 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் பிரேஸ்வெல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 61 ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஜேம்ஸ் நீஷம் 28 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்த்தது. ஸ்காட்லாந்து தரப்பில் கவின் மெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.